பரந்தூர் புதிய விமான நிலையத்தால் தமிழக பொருளாதாரம் வளர்ச்சியடையும்: அமைச்சர் தங்கம் தென்னரசு


பரந்தூர் புதிய விமான நிலையத்தால் தமிழக பொருளாதாரம் வளர்ச்சியடையும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
x

விமான நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அரசால் திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- தமிழக பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ள நிலையில், விவசாயிகளின் நலனும் அவசியமானது.

விமான நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அரசால் திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும். மேலும், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை காலங்களில் வெள்ளம் ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்படும்.

புதிய விமான நிலையம் அமையப்பெறும் நிலப்பகுதி மற்றும் நீர் நிலைகளை பராமரிப்பதற்கும், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாப்பதற்கும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மாற்று திட்டங்களை பரிந்துரைக்கவும் ஒரு உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்படும்.

இந்த குழு பரிந்துரையின் அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நீர் தேவை பாதுகாக்கப்படும்,

விமான போக்குவரத்துக்கு செலவழிக்கப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ரூ.350 கூடுதலாக கிடைக்கும். 2028 க்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படவில்லை எனில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி தேக்கமடையும். எதிர்வரும் 35 ஆண்டுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய விமான நிலையம் அமைய உள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து கேட்பு கூட்டம் மற்றும் நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் முடிவுற்ற பிறகு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


Next Story