சிவகங்கையில், பாதாள சாக்கடை இல்லாதவர்களுக்கும் வரி விதிப்பு
சிவகங்கையில்,பாதாள சாக்கடை இல்லாதவர்களுக்கும் வரி விதிக்கப்பட்டு உள்ளது. அதை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
சிவகங்கையில், பாதாள சாக்கடை இல்லாதவர்களுக்கும் வரி விதிக்கப்பட்டு உள்ளது. அதை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
நகர்மன்ற கூட்டம்
சிவகங்கை நகர்மன்ற கூட்டம் தலைவர் துரைஆனந்த் தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் (பொ) பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் துணைத்தலைவர் கார்கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வீனஸ்ராமநாதன் (தி.மு.க.) : 17-வது வார்டில் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி கழிவுகளை அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. உடனடியாக இப்பணியை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அயூப்கான் (தி.மு.க.):பிள்ளைவயல் காளியம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஆழ்குழாய் தண்ணீரையே குடிக்க பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு இதுவரை குடிநீர் இணைப்பு தரப்படவில்லை. எனவே இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்
ராஜா (அ.தி.மு.க.) : குப்பை வரி விதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் விதிக்கும் போது ஏற்கனவே எந்த ஆண்டு வரை வரி விதிக்கப்பட்டுள்ளது என்பதை நகராட்சியில் உள்ள ஆவணங்களை சரி பார்த்து அதன் அடிப்படையில் விதிக்க வேண்டும். நகராட்சியில் வரி விதிப்பிற்கான ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
அன்புமணி (அ.ம.மு.க.):நீண்டகாலமாக உள்ள பாதாள சாக்கடை பிரச்சினையை சரி செய்ய வேண்டும். துப்புரவு பணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களான பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் எவ்வளவு வாங்கப்பட்டது, கட்டணம் எவ்வளவு? என தெரியப்படுத்த வேண்டும். விஜயகுமார் (காங்):திருவள்ளுவர் தெருவில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாத வீடுகளுக்கும் இணைப்பிற்கான வரி விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இது குறித்து நேரில் ஆய்வு செய்து வரி விதிப்பை முறைப்படுத்த வேண்டும். கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள வடக்கு மயானத்தை நகராட்சி சார்பில் முழுமையாக சீரமைக்க வேண்டும். அல்லது தனியார் தன்னார்வ அமைப்புகள் மூலம் இப்பணிகளை செய்ய அனுமதிக்கலாம். இவ்வாறு அவர்கள் பேசினர்.
பங்களிப்பு தொகை
இதற்கு பதிலளித்து நகர் மன்றத்தலைவர் துரைஆனந்த் பேசும் போது:-
நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 33 சதவீத பங்களிப்பு தொகை வழங்கும் பகுதிகளில் பேவர் பிளாக் சாலை, ஹைமாஸ் உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆர்வமுள்ளவர்கள் பங்களிப்பு செய்யலாம். உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.