விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

வெளிநாட்டிற்கு செல்ல பணம் கட்டி ஏமாற்றப்பட்ட நிலையில் தந்ைத கண்டித்ததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

வெளிநாட்டிற்கு செல்ல பணம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி மகன் சுந்தரபாண்டியன்(வயது 30). டிப்ளமோ சிவில் என்ஜினீயரான இவர் உள்ளூர் வேலையில் போதிய வருவாய் கிடைக்காததால் வெளிநாடு செல்வதற்காக வேண்டி பல இடங்களில் விண்ணப்பங்களை கொடுத்து முயற்சி செய்துள்ளார். இதற்கிடையே தனது நண்பர் ஒருவரின் அறிவுறுத்தலின்படி செந்துறை அருகே உள்ள சோழன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்ட் பிரபாகரன் என்பவரை சுந்தரபாண்டியன் தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து கம்போடியா நாட்டிற்கு செல்வதற்காக சுந்தரபாண்டியன், பிரபாகரனிடம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

தற்கொலை

இந்த நிலையில் பணம் கொடுத்து 4 மாதங்கள் ஆன நிலையில் வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் பிரபாகரன் திரும்ப அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் செல்வமணி இதுகுறித்து தனது மகனிடம் கேட்டு அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சுந்தரபாண்டியன் செட்டிகுளம் சுடுகாடு அருகே பூச்சி மருந்து (விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே சுந்தரபாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story