மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
x

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர்

ஒடுகத்தூர் அருகே வேப்பங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராகுல்மேனன் பிளஸ்-2 படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்புக்காக காத்திருந்தார். அவரது நண்பருக்கு பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

இதனால் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பன் ஹரிகணேஷ் என்பவரை அழைத்துக் கொண்டு ராகுல்மேனன் மோட்டார் சைக்கிளில் பள்ளிகொண்டாவை நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ஹரிகணேஷ் ஓட்டினார். வெட்டுவாணம் தேசிய நெடுஞ்சாலை முனீஸ்வரர் கோவில் அருகே இரவு 12.30 மணிக்கு வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து ராகுல்மேனன், ஹரிகணேஷ் நெடுஞ்சாலையில் தவறி விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ராகுல்மேனன் உயிரிழந்தார். ஹரிகணேஷ் படுகாயங்களுடன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story