சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்கள் அடைப்பு


சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்கள் அடைப்பு
x
தினத்தந்தி 8 Nov 2022 6:45 PM GMT (Updated: 8 Nov 2022 6:46 PM GMT)

சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று சிவகங்கை மாவட்டத்தில் கோவில்கள் அடைக்கப்பட்டன.

சிவகங்கை

சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று சிவகங்கை மாவட்டத்தில் கோவில்கள் அடைக்கப்பட்டன.

சந்திர கிரகணம்

நாடு முழுவதும் நேற்று சந்திர கிரகணம் மாலை 5.47 மணி முதல் 6.26 மணி வரை நடைபெற்றது. இதையொட்டி நேற்று சந்திர கிரகணம் நடைபெற்ற நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடை அடைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில், மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், பத்திரகாளியம்மன் கோவில், திருப்புவனம் புஷ்பவனேசுவரர்-சவுந்திர நாயகி அம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில், குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவில், அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் உள்ளன.

இந்நிலையில் நேற்று சந்திரகிரகணத்தையொட்டி மடப்புரம் கோவில் நடை காலை 10 மணிக்கு சாத்தப்பட்டது. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் முன்பு காத்திருந்தனர். அதன் பின்னர் இரவு 7 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

வெறிச்சோடியது

திருப்புவனம் புஷ்பவனேசுரர்-சவுந்திர நாயகி அம்மன் கோவில் காலை 10 மணிக்கு நடை சாத்தப்பட்டு பின்னர் இரவு 7 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. இதேபோல் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நேற்று காலை 11.30 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெற்ற பின்னர் கோவில் நடை சாத்தப்பட்டது. இரவு 7 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் காலை 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின்னர் இரவு 7 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சந்திர கிரகணத்தையொட்டி நேற்று பல்வேறு இடங்களில் கோவில்கள் பகலில் நடை சாத்தப்பட்டதால் அந்த கோவில் முன்பு மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story