மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதி டிரைவர் பலி
செண்பகராமன்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதியதில் டிரைவர் பரிதாபமாக பலியனார். தாயாரை பார்க்கச் சென்றபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.
ஆரல்வாய்மொழி:
செண்பகராமன்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதியதில் டிரைவர் பரிதாபமாக பலியனார். தாயாரை பார்க்கச் சென்றபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.
டெம்போ டிரைவர்
செண்பகராமன்புதூர் இல்லத்தார் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 38), டெம்போ டிரைவர். இவருக்கு பிரகிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இசக்கியப்பன் தற்போது பூதப்பாண்டி அருகே உள்ள மத்தியாஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் அவர் தோவாளையில் உள்ள ஒரு பூக்கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
டெம்போ மோதியது
இந்தநிலையில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை என்பதால் செண்பகராமன்புதூரில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டார். செண்பகராமன்புதூர் அருகே அவ்வையார் அம்மன்கோவில் பகுதியில் சென்றபோது பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு டெம்போ திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் இசக்கியப்பன் தூக்கிவீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். மகனின் உடலை பார்த்து அவரது தாயார் ராசம்மாள் கதறி அழுத காட்சி அங்கு நின்றவர்களின் கண்களையும் குளமாக்கியது.
இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோபி, சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான இசக்கியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாக்குதல்
இதற்கிடையே விபத்து நடந்ததும் டெம்போவை ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவல்லிபுத்தூர் மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த சோலைசாமி (30) அங்கிருந்து தப்பியோடி ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைய சென்றார். இதைகண்ட சிலர் அவரை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த சோலைசாமியை போலீசார் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
பொங்கல் தினத்தன்று டிரைவர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.