பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்


பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
x

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விசேஷ நாட்களில் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் சென்று புறப்பட்ட இடத்தை அடைகின்றனர்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.52 மணிக்கு நிறைவடைந்தது. பவுர்ணமியொட்டி நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். பகலிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கடந்த ஓரிரு தினங்களாக திருவண்ணாமலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் பகலில் பரவலாக வெயில் அடித்தது. இதனால் பகல் நேரத்தில் கிரிவலம் சென்ற பக்தர்கள் தரை சூடு தாங்க முடியாமல் நிழல் உள்ள பகுதி வழியாக கிரிவலம் சென்றனர்.

மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், அருணாசலேஸ்வரர் கோவிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

போலீசார் பாதுகாப்பு

மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் கிரிவலம் சென்றதால் திருவண்ணாமலை முழுவதும் பக்தர்கள் மயமாக காட்சியளித்தது.

பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.



Next Story