மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ
x

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீயை, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை,

கோவை மாவட்டம் ஆலாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட நாதேகவுண்டன்புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி உள்ளிட்ட இடங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 11-ந் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், கொழுந்துவிட்டு எரிவதால் தீயை அணைப்பதில் வனத்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கோவைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் தீயணைப்பு துறையினரும் இணைந்து மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் பயங்கர தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விமானப்படை ஹெலிகாப்டர்

கோடைகாலத்தில் மூங்கில் குச்சிகள் காய்ந்த நிலையில் இருந்ததாலும், புல்வெளிகள் கருகிய நிலையில் இருந்ததாலும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு புகை மூட்டத்தால் கண் எரிச்சல் ஏற்பட்டது. இருந்தபோதிலும், அதற்கு முதலுதவி சிகிச்சை எடுத்து கொண்டு, தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தீ வேகமாக வனத்தில் பரவி எரிந்ததால், ஹெலிகாப்டர் உதவியுடன் அணைக்க வனத்துறையினர் முடிவு செய்து, மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர். கலெக்டரின் முயற்சியின்பேரில் சூலூரில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க அனுமதி பெறப்பட்டது.

அதன்படி நேற்று காலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் தீ பரவியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு வந்தது. பின்னர் மலைக்கு பின்புறம் உள்ள மலம்புழா அணையில் இருந்து ரப்பர் தொட்டியில் தண்ணீரை எடுத்து வந்து, ஹெலிகாப்டர் மூலம் தீ எரியும் வனப்பகுதியில் ஊற்றியது. பலமுறை ஹெலிகாப்டரில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி காட்டுத்தீயை அணைக்கும் பணி நடந்தது. இதனால் தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

தீவிர நடவடிக்கை

தீயை அணைக்கும் பணிகளை பார்வையிட வந்த தமிழக வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் காட்டுத்தீ பரவாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் காட்டுத்தீ தடுப்பு நடவடிக்கையாக 4 முதல் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 20 பேர் முதல் 25 பேர் வரை தீத்தடுப்பு பணியை மேற்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story