கலையை அரசியலாகவும், அரசியலை கலையாகவும் மாற்றியவர் கலைஞர்: சூர்யா பேச்சு
கலைஞர் கருணாநிதிக்கு விழா நடத்துவது பெருமையாக உள்ளது என நடிகர் சூர்யா பேசினார்.
சென்னை,
சென்னை கிண்டியில் 'கலைஞர் 100 விழா' சென்னை கிண்டியில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், திரைத்துறையை சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு பேசியதாவது;
"சினிமாவை மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தி, அரசியலில் கோலோச்சி பல சாதனைகள் படைத்த மாபெரும் தலைவர் கருணாநிதி. அவரது சாதனைகள் ஏராளம். புரட்சி கருத்துகளால் சினிமாவை ஆட்டிப்படைத்தார். அவரை பற்றி பேசுவதே நமது கடமையும், உரிமையும்கூட.
கலையை அரசியலாகவும், அரசியலை கலையாகவும் மாற்றியவர் கலைஞர். அரசியலில் பல மாற்றங்கள், பெண்களுக்கு சொத்து பிரித்து கொடுக்க வேண்டும் என்று பல்வேறு விசயங்களை அவர் பேசியுள்ளார்.
பராசக்தி படத்தில் கைரிக்க்ஷா இழுத்து வருபவரை பார்த்து சிவாஜி வருத்தப்பட்டு பேசுவார். "நீ வேணும்னா ஆட்சிக்கு வந்து மாத்திக்காட்டேன்" என காவலர் பேசும் வசனம் வரும். பராசக்தி வெளியாகி 17 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்து மனிதர்கள் இழுக்கும் கைரிக்க்ஷாவை ஒழித்தவர் கலைஞர். அப்படிப்பட்ட கருணாநிதிக்கு இப்படி ஒரு விழா நடத்துவது பெருமையாக உள்ளது." இவ்வாறு அவர் பேசினார்.