உண்மையான எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்பட்டு வருகிறது-அன்புமணி ராமதாஸ் பேட்டி


உண்மையான எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்பட்டு வருகிறது-அன்புமணி ராமதாஸ் பேட்டி
x

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையில் தான் அதிகம் என்றும், உண்மையான எதிர்க்கட்சியாக பா.ம.க. தான் செயல்பட்டு வருகிறது என்றும் திருச்சியில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

திருச்சி

திருச்சி, ஜூன்.14-

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையில் தான் அதிகம் என்றும், உண்மையான எதிர்க்கட்சியாக பா.ம.க. தான் செயல்பட்டு வருகிறது என்றும் திருச்சியில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பாய்லர்ஆலை

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சியில் உள்ள பாய்லர் ஆலையின் பங்குகளை தனியாருக்கு விற்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் பா.ம.க. போராட்டம் நடத்தும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் சென்று விட்டால் இட ஒதுக்கீடு பின்பற்றப்படமாட்டாது. அது சமூக நீதிக்கே எதிரானதாக அமையும். எனவே பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

மேகதாது அணை விவகாரம்

வருகிற 17-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா விவாதிக்க திட்டமிட்டுள்ளது. அதை அங்கு விவாதிக்க கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை. நீர்பங்கீடு குறித்து முடிவெடுக்க தான் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. எனவே இது குறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் அல்லது காவிரி ஆணைய கூட்டத்தை ரத்து செய்யும் உத்தரவை பெற வேண்டும்.

திருச்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் இத்திட்டம் முடியாமல் இருக்கிறது. இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதனை வலியுறுத்தி பா.ம.க. போராட்டம் நடத்தும். மது, போதை பழக்கத்தை தடுக்கவும், பூரண மதுவிலக்கை கொண்டு வரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீஸ் நிலைய மரணங்கள்

தமிழகத்தில் போலீஸ் நிலையங்களில் கைதிகள் மரணம் அடைவது தொடர்கதையாக இருந்து வருகிறது காவல்துறையினருக்கு மேலும் பயிற்சி தேவைப்படுகிறது. இதுபோன்ற மரணங்களை தடுக்க ஒட்டுமொத்த காவல்துறைக்கும் முதல்-அமைச்சர் அறிவுரை வழங்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை போய்விடும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். கொரோனா கால நடவடிக்கையில் தமிழக அரசு நல்ல முறையில் செயல்பட்டது.

பா.ம.க. தான் எதிர்க்கட்சி

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து பா.ம.க. உயர்மட்டக்குழு மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகளிடம் பேசி முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் சட்டமன்றத்தில் அ.தி.மு.க. வேண்டுமானால் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கலாம். ஆனால் உண்மையான எதிர்க்கட்சியாக பா.ம.க. தான் செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் பா.ம.க. நடத்திய பல போராட்டங்கள் வெற்றிபெற்றுள்ளது. அது தான் மக்களுக்கு முக்கியம்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பேட்டியின்போது நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

-----


Next Story