மார்கண்டேய நதியில் இருந்து படேதலாவ்ஏரிக்கு செல்லும் கால்வாய்களை தூர்வார வேண்டும்
மார்கண்டேய நதியில் இருந்து படேதலாவ் ஏரிக்கு செல்லும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கிருஷ்ணகிரி:
மார்கண்டேய நதியில் இருந்து படேதலாவ் ஏரிக்கு செல்லும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
மாங்கனி கண்காட்சி
ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி கண்காட்சி மே மாதம் 15-ந் தேதி தொடங்க வேண்டும். இந்த ஆண்டில் மா அறுவடை முடிந்தநிலையில் கண்காட்சி தொடங்கி உள்ளது. கண்காட்சியில் வெளிமாநில மா வகைகள்தான் இடம் பெற்றுள்ளது. இதேபோல் மாங்கனி கண்காட்சியில் உள்ள அரசுத்துறை அரங்குகளில் தொடர்புடைய பொறுப்பு அலுவலர்களின் செல்போன் எண்களை தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
அரசின் மானிய திட்டங்கள் குறித்தும், எவ்வாறு பெறுவது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் வெளியிட வேண்டும். ஊத்தங்கரை தாலுகாவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றிடவேண்டும்.
தூர்வார வேண்டும்
குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மூத்த விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொள்கின்றனர். சில நேரங்களில் கூட்டம் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. எனவே, குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், மாவட்டத்தில் நெல், ராகி உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் சிறந்த சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்க வேண்டும்.
மார்கண்டேய நதியில் இருந்து படேதலாவ் ஏரிக்கு செல்லும் கால்வாய்களை தூர்வார வேண்டும். ஒவ்வொரு முறையும் தண்ணீர் வரும் போது தூர்வாரும் பணிகள் மேற்கொள்வது பயனற்றது. தென்பெண்ணை ஆறு செல்லும் தண்ணீரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேஷன் கடைகளில் ராகி
அத்திப்பள்ளம் ஏரி நிரம்பி உள்ளதால், வாய்க்கால்கள் தூர்வார வேண்டும். மாமரங்களுக்கு மருந்து தெளிக்கும் ஸ்பிரே இயந்திரம் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்குவதைவிட விவசாயிகளுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு தாமதம் இல்லாமல் இழப்பீடு வழங்க வேண்டும். தற்போது நிலக்கடலை, காரமணி வகை பயிர்களை யானைகள் அதிகளவில் சேதப்படுத்தி உள்ளது.
எனவே, ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் ராகி வழங்குவதை போல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு தலா 5 கிலோ ராகி வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்கள்.
தொடர்ந்து விவசாயிகளின் கேள்விகளுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி மற்றும் அலுவலர்கள் பதில் அளித்து பேசியதாவது:-
பயிர் சேதத்திற்கு இழப்பீடு
அடுத்த ஆண்டு முதல் மே மாதம் 15-ந் தேதியே மாங்கனி கண்காட்சி தொடங்கப்படும். மானியத் திட்டங்கள் தொடர்பான புத்தகம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும். ஏற்கனவே நீதிமன்ற வழிகாட்டுதல்கள் படி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம் முதல் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்குவது தொடர்பாக, அலுவலர்களுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளில் ராகி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
கால்நடை பராமரிப்புத்துறை மூலம் சோளம், தாது உப்பு உள்ளிட்டவை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். தென்பெண்ணை நீர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் நிரப்பப்படுகிறது, இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதில் அரசு அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.