சாலை ஓரம் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு


சாலை ஓரம் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
x

அருப்புக்கோட்டை அருகே நின்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்



தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மீராசாகிப். இவரது மகன் பீர்முகமது(வயது 34).கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் பாலக்காட்டில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் காயல்பட்டணம் திரும்பிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே வந்தபோது தூக்கம் வந்ததால் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் கஞ்சநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரில் தூங்கியுள்ளார்.அப்போது திடீரென காரில் இருந்து புகை கிளம்பி தீ பிடித்து எரிந்துள்ளது.

வெப்பம் அதிகமானதால் எழுந்த பீர்முகமது உடனடியாக காரில் இருந்து வெளியேறி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.விரைந்து வந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயினை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர்.

அருகில் வேறு கார்கள் நின்று கொண்டிருந்தாலும் தீயணைப்புத்துறை வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் இல்லை.இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நின்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story