கூலி தொழிலாளியின் கோரிக்கையை ஒரு மணி நேரத்தில் நிறைவேற்றிய கலெக்டர்


கூலி தொழிலாளியின் கோரிக்கையை ஒரு மணி நேரத்தில் நிறைவேற்றிய கலெக்டர்
x

கூலி தொழிலாளியின் கோரிக்கையை ஒரு மணி நேரத்தில் கலெக்டர் நிறைவேற்றினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறையை சேர்ந்தவர் அருண் சற்குணம் (வயது 43). இவர் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். இருதய நோயினால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, டாக்டர்கள் அதிகம் செலவாகும் என தெரிவித்துள்ளார்கள். முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளலாம் என நினைத்து, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை விண்ணப்பிக்க சென்றபோது அவரிடம் குடும்ப அடையாள அட்டை இல்லை. இதனால் பல நாட்களாக சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தார். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளார். அவர் திருப்பூர் பகுதியில் பணிபுரிந்து வருவதால் திருமாந்துறையில் உள்ள அவரது வீட்டிற்கு விசாரணைக்கு சென்ற அலுவலர்கள் வீட்டில் ஆள் இல்லை என்பதற்காக அவரது மனுவினை நிராகரித்துள்ளனர். இந்நிலையில், குடும்ப அட்டை கோரியும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை கோரியும் அருண் சற்குணம் கோரிக்கை மனுவோடு நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அலுவலகம் வந்த கலெக்டர் கற்பகம் அருண் சற்குணத்திடம் என்ன கோரிக்கை என கேட்டறிந்தார். அருண் சற்குணத்தின் நிலையினை உணர்ந்த கலெக்டர் உடனடியாக அவருக்கு குடும்ப அட்டையும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டையும் வழங்க உத்தரவிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அருண் சற்குணத்திற்கு புதிய குடும்ப அட்டை மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத அருண் சற்குணம் கண்ணீர் மல்க கலெக்டருக்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்றார்.


Next Story