குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணி விரைவில் தொடங்கும்


குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணி விரைவில் தொடங்கும்
x

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என இஸ்ரோ ஆலோசகர் சிவன் கூறினார்.

விருதுநகர்


குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என இஸ்ரோ ஆலோசகர் சிவன் கூறினார்.

சிவன் பேட்டி

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. அந்த வகையில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சந்திரயான்-3 திட்டமும் செயலாக்கம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சூரியனைப்பற்றி ஆராயவும் இருக்கிறோம்.

நாம் நமது தேவைகளுக்காக விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எந்த நாடுகளுக்கும் சவால் விடும் நோக்கம் கிடையாது. நமது நாட்டுக்கு வந்து தங்களது விண்கலத்தை ஏவும் நடைமுறையை வெளிநாட்டினர் பின்பற்றுகின்றனர்.

குலசேகரன்பட்டினம்

கடந்த ஆண்டு வெப்-1 வெளிநாட்டு விண்கலம் இங்கிருந்து ஏவப்பட்டது. தற்போதும் மற்றொரு வெப் விண்கலத்தை ஏவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நமது நாட்டிற்கு அன்னிய செவாவணி அதிகம் வர வாய்ப்புள்ளது.

டிஜிட்டல் நடைமுறை நமக்கு வந்த பின்பு விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்கான நிலம் தமிழக அரசால் வழங்கப்பட்டு விட்டது. தற்போது விண்வெளி ஏவுதளத்திற்கு ஏற்ற வகையில் அப்பகுதியில் உள்ள மண் உள்ளதா என்பதை பற்றிய பரிசோதனை நடந்து வருகிறது. அடுத்தக்கட்டமாக கட்டுமான பணி தொடங்கும். இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதால் தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது., பொருளாதாரமும் மேம்பாடு அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காமராஜர் சிலைக்கு மரியாதை

முன்னதாக அவர் விருதுநகர் மாரியம்மன் கோவிலில், மனைவி மாலதியுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, அந்த இல்லத்தை பார்வையிட்டார்.

அவருடன் விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் மூத்த விஞ்ஞானி சிவசுப்பிரமணியம் உடன் இருந்தார்.


Next Story