தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு ஜல்லிக்கட்டு காளையுடன் வந்த மாடு வளர்ப்போர்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு ஜல்லிக்கட்டு காளையுடன் வந்த மாடு வளர்ப்போர்
தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்றக்கோரி, தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு காளையுடன் வந்து ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போரும், வீரர்களும் மனு அளித்தனர்.
காளையுடன் வந்து மனு
ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர், காளையை வளர்க்க அரசு சார்பில் ஊக்க தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தது.
நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, தஞ்சை ருத்ரன் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் இளையராஜா தலைமையில் காளை வளர்ப்போர் மற்றும் வீரர்கள் ஜல்லிக்கட்டு காளையுடன் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
மாதம் ரூ.1000 வழங்க வேண்டும்
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை வழங்கப்படவில்லை. எனவே ரூ.1000 உடனடியாக வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு காளையை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு டோல்கேட்டில் இலவச அனுமதி வழங்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முறையை ரத்து செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடையும் வீரர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காட்டுப்பன்றிகள் தொல்லை
தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா அள்ளூர், அரசக்குடியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், விவசாய பகுதிகளான அள்ளூர், அரசக்குடியில் காட்டு பன்றிகள் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் விவசாயிகள் 2 பேரை காட்டுப்பன்றிகள் தாக்கி உள்ளது. எனவே காட்டுப்பன்றிகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
காலி செய்ய வற்புறுத்தக்கூடாது
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள திரிபுரசுந்தரி நகர் பகுதி மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், திரிபுரசுந்தரி நகர் பகுதியில் 500 குடும்பங்கள் 75 ஆண்டு காலமாக வசித்து வருகிறோம். இந்த நிலையில் நாங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி காலி செய்ய சொல்கிறார்கள். நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு வரி, மின்சார கட்டணம் செலுத்தி வருகிறோம். சாலையை அகலப்படுத்தவும், வாரியை அகலப்படுத்தவும், வீடுகளை இடிக்கப்போகிறோம் என கூறி உள்ளனர். இங்கு வசிக்கும் அனைவரும் அன்றாடம் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே வாழ்வாதாரம் பாதிக்காமல் அதே இடத்தில் தொடர்ந்து வசிக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.