குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலி கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலூர் முதுநகர்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பெய்து வருகிறது. இதில், தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக, மாறக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கடலோர பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதையடுத்து, கடலூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சார்பில், மீனவர்களுக்கு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டது. அதன்படி மறு அறிவிப்பு வரும் வரை, கடலூர் துறைமுகம் பகுதியை சேர்ந்த பைபர் மற்றும் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க செல்லவில்லை
இதையடுத்து, நேற்று மீனவர்கள் யாரும் ஆழ் கடலுக்கு சென்று மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்துக் கொண்டு இருக்கும் ஒரு சில விசைப்படகு மீனவர்கள் விரைவில் கரைக்கு திரும்புவார்கள் என தெரிகிறது.
மறு அறிவிப்பு வரும் வரை படகுகளுக்கு வழங்கப்படும் டீசல் நிறுத்தப்பட்டுள்ளதாக, மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை என்பதால், கடலூர் துறைமுகம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
பரங்கிப்பேட்டை
இதேபோன்று, பரங்கிப்பேட்டை அருகே முடசல்ஓடை, அன்னங்கோவில், முழுக்குதுறை ஆகிய மீன்பிடி தளங்களில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தையும், அந்த பகுதிகளில் காரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்.