தொடர்மழை: மதுரையில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம் - கழிவு நீரோடு செல்லும் வைகை நீர்


தொடர்மழை: மதுரையில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம் - கழிவு நீரோடு செல்லும் வைகை நீர்
x

கழிவு நீர் ஆற்று நீருடன் கலந்து செல்கிறது

தொடர் மழை மற்றும் வைகை அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது.

மதுரை:

வைகை அணையை சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதையொட்டி, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மதுரையில் உள்ள வைகை ஆற்றில் அதிக அளவு வெள்ளம் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த வெள்ளம் சிம்மக்கல் யானைக்கல் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்கிறது. மேலும், அதன் இருபுறமும் உள்ள சாலைகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கி இருப்பதால் வெள்ள நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்ற வண்ணம் உள்ளது. பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குவதற்காக போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுபோல், மதுரை நகரில் முக்கியப் பாலங்கள் மற்றும் வைகை ஆற்றின் கரையோரங்களில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக அளவு வெள்ளம் வருவதால், மதுரை மாவட்டத்தில் வைகையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பெய்த தொடர்மழை காரணமாக நீர் நிலைகள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதனால் மதுரை மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். புறநகர் பகுதிகளில் விவசாய பணிகளும் தீவிரமாக நடக்கிறது.

மேலும் பந்தல்குடி கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆற்று நீருடன் சேர்ந்து கலந்து செல்கிறது. இவற்றை தடுத்து சுத்தமான தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், கழிவு நீர் செல்ல மாற்று வழிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story