பொன்னியின் செல்வன் வெளியான திரையரங்கில் நடந்த சம்பவம் - ரசிகர்கள் அதிர்ச்சி
பொன்னியின் செல்வம் வெளியான திரையரங்கில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சேலம்,
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.
இதுபோன்று சேலத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் 3 திரைகளில் பொன்னியின் செல்வன் வெளியானது. இந்த நிலையில் திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் கேன்டீனில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், திண்பண்டங்களை தேதி குறிப்பிப்படாமல் இருந்து உள்ளது.
மேலும், குளிர்சாதன பெட்டியில் இருந்த பாலில் பூச்சிகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அவர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திரையரங்கில் இருந்த 2 கேன்டீன்களில் சோதனை செய்தனர். அப்போது உற்பத்தி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த குளிர்பானங்கள் 150 டப்பாக்கள், 10-க்கும் மேற்பட்ட பிஸ்கட் டப்பாக்கள் மற்றும் குளிர் பானங்கள் தயாரிக்க வைத்திருந்த 50 லிட்டருக்கு மேலான பால் உள்ளிட்டவைகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த பொருட்கள் அனைத்தையும் அழித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், திரையரங்கு உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நேட்டீஸ் வழங்கி உள்ளனர்.