விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


தினத்தந்தி 29 Nov 2022 6:45 PM GMT (Updated: 30 Nov 2022 3:30 PM GMT)

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 68 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 68 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

3-வது கட்ட போராட்டம்

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏற்கனவே இரண்டு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று 3-வது கட்ட போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

அதாவது அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் சிறிது நேரம் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமை தாங்கினார். இளச்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாவட்ட செயலாளர் பேரறிவாளன், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி செயலாளர் அம்பேத் வளவன், கரையான்குழி முகாம் செயலாளர் சகாயதாஸ், மகளிர் அணி ராணி, கீரிப்பாறை சுபாஷ் மற்றும் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் என மொத்தம் 50 பெண்கள் உள்பட 68 பேர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பரபரப்பு

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி தட்டான்விளை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தையொட்டி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்புடன் காட்சி அளித்தது.


Next Story