சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க நகையை திருடிய அதிகாரி...? பக்தர்கள் அதிர்ச்சி


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க நகையை திருடிய அதிகாரி...? பக்தர்கள் அதிர்ச்சி
x

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை எண்ணும்போது பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

இதற்கிடையே தற்போது சபரிமலை சீசன் என்பதால் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் அம்மனை தரிசிக்க வருகின்றனர். அதேபோல் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்து மாரியம்மனை தரிசிக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று கோவிலில் மாதாந்திர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் தங்க நாணயங்களை மறைத்து எடுத்து சென்றதாக புகார் எழுந்தது. இது பக்தர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்தது. இன்று சமயபுரம் கோவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி சமயபுரம் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து போலீசார் கோவிலுக்கு விரைந்தனர். உண்டியல் பணத்தை எண்ணும்போது பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர். இதில் மேற்கண்ட அதிகாரி கைவரிசை காட்டி இருந்தால் உடனடியாக அவரை கைது செய்ய நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story