எரியூட்டப்பட்ட உடலை தண்ணீரை ஊற்றி அணைத்து போலீசார் கைப்பற்றியதால் பரபரப்பு
திட்டக்குடி அருகே எரியூட்டப்பட்ட தொழிலாளி உடலை தண்ணீரை ஊற்றி போலீசார் அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநத்தம்,
முதல் மனைவியுடன் விவாகரத்து
திட்டக்குடி அருகே உள்ள செவ்வேரி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ராஜேஷ் (வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் விவாகரத்து ஆகி விட்டது.
இந்த நிலையில் ராஜேஷ், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொளார் கிராமத்தை சேர்ந்த சபீதா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
எரியூட்டப்பட்ட உடல்
ராஜேசுக்கும், சபீதாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ராஜேஷ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து ராஜேசின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்வதற்காக அங்குள்ள இடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். பின்னர் அங்கு அவரது உடலுக்கு எரியூட்டப்பட்டது.
தண்ணீரை ஊற்றி...
இதற்கிடையே ராஜேசின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை யாருக்கும் தெரிவிக்காமல் தகனம் செய்வதாகவும் சபீதாவின் குடும்பத்தினர், திட்டக்குடி போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து திட்டக்குடி போலீசார் இடுகாட்டிற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு எரிந்து கொண்டிருந்த ராஜேஷின் உடல் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பின்னர் பாதி எரிந்த நிலையில் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.