வட்டார அலுவலரிடம் செல்போன்களை ஒப்படைக்கும் போராட்டம் நாளை நடக்கிறது


வட்டார அலுவலரிடம் செல்போன்களை ஒப்படைக்கும் போராட்டம் நாளை நடக்கிறது
x

கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார அலுவலரிடம் செல்போன்களை ஒப்படைக்கும் போராட்டம் நாளை நடக்கிறது.

பெரம்பலூர்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கினார். செயலாளர் தமிழரசி, பொருளாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மணிமேகலை, சி.ஐ.டி.யு. சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அங்கன்வாடிக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்கும் முழுமையான தொகையை வழங்க வேண்டும். அங்கன்வாடியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்த மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். உணவு செலவினங்களுக்கு முன் பணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். பணி வரன்முறை படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசே நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (புதன்கிழமை) வட்டார அலுவலரிடம் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் செல்போன்களை ஒப்படைக்கும் போராட்டமும், கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இயக்குனர் அலுவலகத்திற்கு உள்ளே காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


Next Story