குரங்குகள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் கடும் அவதி


குரங்குகள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் கடும் அவதி
x

குரங்குகள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் கடும் அவதி

தஞ்சாவூர்

தஞ்சையில் வீடு புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. அரிசி, பழங்கள், பொருட்களை தூக்கி செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குரங்குகள் தொல்லை

தஞ்சை மாநகரில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. குறிப்பாக தஞ்சை பில்லுக்காரத்தெருவில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. ஒரே நேரத்தில 5 அல்லது 6 குரங்குகள் கூட்டமாக வந்து மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி வருகிறது. மேலும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களையும் தூக்கி செல்கிறது.

குறிப்பாக பழங்கள், அரிசி போன்றவற்றை தூக்கி செல்கின்றன. அதணை வீணாக்குவதும், தின்பதுமாக உள்ளது. தினமும் இது போன்ற சம்பவம் நடைபெறுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாடி வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் தான் அதிக அளவில் குரங்குகள் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.

அரிசி, பழங்களை வீணாக்குகின்றன

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டில் சாக்கில் 10 கிலோ அரிசி வாங்கி வந்து வைத்துள்ளனர். அந்த அரிசி மூட்டையில் இருந்த அரிசியை தின்றும், வீணாக்கியதோடு, சாக்குப்பையோடு தூக்கி சென்று விட்டது. இதே போல் பழங்களையும் தூக்கி சென்று விடுகின்றன. மேலும் வீடு அருகில் உள்ள மாமரம், சீதாப்பழம் போன்ற மரங்களில் உள்ள பழங்களை தின்பதோடு, காய்கறிகளையும் பறித்து வீணாக்கி வருகிறது. வீட்டில் இருக்கும் கண்ணாடியையும் தூக்கிச்சென்று உடைத்து விடுகிறது.

சிறுவர்களை கண்டால் விரட்டுவதும், சிறுவர்கள் கையில் இருக்கும் பொருட்களை பிடுங்கி செல்வதுமாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானவர்கள் அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருபவர்கள். அவர்களுக்கு குரங்குகள் தொல்லையால் பெரும் செலவு ஆகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறார்கள்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாநகருக்குள் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிப்பதோடு, அவற்றை வனப்பகுதிகளில் கொண்டு விட்டால் இந்த பகுதி மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.


Related Tags :
Next Story