விதிமீறலில் ஈடுபடும் கல்குவாரிகளை மூட வேண்டும்-கலெக்டரிடம், பல்வேறு அமைப்பினர் மனு


விதிமீறலில் ஈடுபடும் கல்குவாரிகளை மூட வேண்டும்-கலெக்டரிடம், பல்வேறு அமைப்பினர் மனு
x

நெல்லை மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து விதிமீறலில் ஈடுபடும் கல்குவாரிகளை மூட வேண்டும் என்று நெல்லை கலெக்டரிடம், பல்வேறு அமைப்பினர் மனு வழங்கினர்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து விதிமீறலில் ஈடுபடும் கல்குவாரிகளை மூட வேண்டும் என்று நெல்லை கலெக்டரிடம், பல்வேறு அமைப்பினர் மனு வழங்கினர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தென் மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட செயலாளர் ஜமால், பொருளாளர் ஜாபர், இன படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பீட்டர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நடராஜன் உள்ளிட்டோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு பாறாங்கற்களை தூக்கி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர். அதில், ''அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகளை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும். இனிமேல் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் கல்குவாரிகளை ஆய்வு செய்து உரிமம் இல்லாத குவாரிகளை உடனே மூட வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தனர்.

கல்குவாரிகளில் ஆய்வு செய்து...

இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கத்தினர் தென் மண்டல செயலாளர் இசக்கி பாண்டியன் தலைமையில் வழங்கிய மனுவில், ''அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் அளவுக்கு அதிகமான ஆழத்தில் சட்ட விதிகளை பின்பற்றாமல் குவாரி செயல்பட்டதால், அங்கு பணியாற்றிய 6 பேர் மீது பாறாங்கற்கள் சரிந்து விழுந்ததில் 4 பேர் இறந்துள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்திற்கு கல்குவாரியை முறையாக ஆய்வு செய்து அளவீடு செய்யாமல் உரிமம் வழங்கிய கனிமவளத்துறை அதிகாரிகளே காரணமாகும். இந்த சம்பவம் போன்று மற்றொரு சம்பவம் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் கல்குவாரிகள், எம்.சாண்ட் தயாரிப்பு நிறுவனங்களிலும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்'' என்று கூறியுள்ளனர்.

வீடுகள் இடியும் நிலை

சீவலப்பேரி குப்பக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வேல்பாண்டியன் வழங்கிய மனுவில், நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பல குவாரிகள் செயல்படுகின்றன. அந்த குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் செயல்படுகின்ற குவாரிகளால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே குவாரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

அம்பை அருகே இடைகால் பஞ்சாயத்து துணைத்தலைவர் தர்மராஜ், அணைந்தநாடார்பட்டி ஊர் நிர்வாகி செல்லத்துரை ஆகியோர் தலைமையில் ஊர் மக்கள் வழங்கிய மனுவில், ''எங்கள் பகுதியில் பஞ்சாயத்து யூனியன் அனுமதி இல்லாமல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரிக்கு அருகில் குடியிருப்பு, பள்ளிக்கூடங்கள் உள்ளன. பாறைகள் தகர்க்க வைக்கப்படும் வெடிகளால், வீடுகள் இடிந்து விழும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் அந்த குவாரியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

கன்னடியன் கால்வாய்

கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் பகுதி முன்னேற்ற சங்கத்தினர் தலைவர் பாபநாசம் தலைமையில் வழங்கிய மனுவில், ''கன்னடியன் கால்வாய் பகுதியில் 12 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயம் செய்வதற்காக ஜூன் மாதம் 1-ந்தேதி கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறந்து விடவேண்டும். கால்வாயில் உள்ள அமலைச்செடிகளை அகற்றி, கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

தேவர்குளம் பகுதி பெண்கள், 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வாரம் முழுவதும் வேலை வழங்க வேண்டும். இதில் ஒருதலைப்பட்சமாக வேலை வழங்க கூடாது என்று கூறி மனு கொடுத்தனர்.


Next Story