கன்னியாகுமரியில் கடல் திடீரென்று உள் வாங்கியதுவெளியே தெரிந்த சிவலிங்கத்தை பக்தர்கள் வழிபட்டனர்


கன்னியாகுமரியில் கடல் திடீரென்று உள் வாங்கியதுவெளியே தெரிந்த சிவலிங்கத்தை பக்தர்கள் வழிபட்டனர்
x

கன்னியாகுமரியில் கடல் திடீரென்று உள்வாங்கியது. கடல் நீரில் இருந்து வெளியே தெரிந்த சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

கன்னியாகுமரியில் கடல் திடீரென்று உள்வாங்கியது. கடல் நீரில் இருந்து வெளியே தெரிந்த சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

கடல் உள்வாங்கியது

கன்னியாகுமரியில் சுனாமிக்கு பிறகு அமாவாசை மற்றும் பவுர்ணமியையொட்டி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடல் நீர்மட்டம் திடீரென்று தாழ்வதும், கடல் உள்வாங்குவதும், கடல் நீர்மட்டம் உயர்வதும், அலையே இல்லாமல் குளம்போல் காட்சியளிப்பது போன்ற இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அந்த அடிப்படையில் இன்று அமாவாசை என்பதால் நேற்றுமுன்தினம் மாலையில் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரம் கடல் "திடீரென்று" உள் வாங்கியது.

சிவலிங்கம் தெரிந்தது

இதனால் அந்த பகுதியில் கடலுக்குள் மூழ்கியிருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதில் பாறையில் இருந்த சுமார் 2 அடி உயரம் உள்ள சிவலிங்கமும் முழுமையாக வெளியே தெரிந்தது. இந்த செய்தி அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.

அதைத்தொடர்ந்து சிவலிங்கத்தை காண ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் திரண்டனர். அவர்கள் கடலுக்குள் மூழ்கி இருந்த சிவலிங்க சிலை வெளியே தெரிந்ததை பார்த்து பரவசம் அடைந்தனர். நேற்றுமுன்தினம் பிரதோஷம் என்பதால் அந்த சிவலிங்க சிலைக்கு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் நடத்தினர். அப்போது சிவலிங்கத்துக்கு எண்ணெய், அரிசி மாவு, மஞ்சள் பொடி, களபம், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, புனித நீர் மற்றும் கடல் தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடத்தினார்கள்.

அதன் பிறகு அந்த சிவலிங்கத்துக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தி அலங்கார தீபாராதனை காட்டினர். அப்போது கடற்கரையில் திரண்டிருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த சிவலிங்கத்தை வழிபட்டனர்.


Next Story