திட்டக்குடி அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
திட்டக்குடி அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநத்தம்,
திட்டக்குடி அடுத்த செவ்வேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(வயது 60). விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவரும் இவருடைய மனைவி ராஜலட்சுமியும் வீட்டின் வறண்டாவில் படுத்து தூங்கினர். மகன் சிவனேசன், மருமகள் சங்கீதா மற்றும் பேரக்குழந்தைகள் அருகில் உள்ள அறையில் படுத்து தூங்கினர். பின்னர் நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டை சோதனை செய்து பார்த்தபோது, பூஜை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 3 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை காணவில்லை.
ரூ.1 லட்சம்
இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நள்ளிரவில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பூஜை அறையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
தீபாவளி பலகாரங்களையும் விட்டுவைக்காத மர்மநபர்கள்
திட்டக்குடி அருகே சண்முகத்தின் வீட்டில் நகை-பணத்தை திருடிய மர்மநபர்கள், வீட்டில் வேறு எங்காவது நகை-பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என வீடு முழுவதும் தேடி பாா்த்துள்ளனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் தீபாவளி பண்டிகைக்காக செய்த பலகாரங்கள் இருந்துள்ளன. அதை பார்த்த மா்மநபா்களுக்கு பலகாரங்களை ருசி பாா்க்க ஆசை ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள் பலகாரங்களையும், அருகில் இருந்த தண்ணீர் குடத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்றுள்ளனா். பின்னா் அங்கிருந்த புளியமரத்தின் அடியில் அமர்ந்து பலகாரங்கள் அனைத்தையும் நிதானமாக சாப்பிட்ட பிறகே நகை-பணத்துடன் தப்பி சென்றுள்ளனர்.