திண்டுக்கல் வந்த 'வந்தே பாரத்' ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.


திண்டுக்கல் வந்த  வந்தே பாரத் ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
x
தினத்தந்தி 24 Sep 2023 7:30 PM GMT (Updated: 24 Sep 2023 7:30 PM GMT)

திண்டுக்கல் வந்த ‘வந்தே பாரத்’ ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

திண்டுக்கல்

'வந்தே பாரத்' ரெயில்

நெல்லை-சென்னை இடையே 'வந்தே பாரத்' என்ற நவீன சொகுசு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான தொடக்க விழா நெல்லை ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் இந்த ரெயில் போக்குவரத்தை நேற்று தொடங்கி வைத்தார். அதையடுத்து மதியம் 12.30 மணி அளவில் நெல்லையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டது.

கட்டணம் இல்லாமல் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரெயிலில் ரெயில்வே அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் பயணம் செய்தனர்.

விருதுநகர், மதுரை வழியாக இந்த ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு மாலை 4.05 மணிக்கு வந்தடைந்தது. அப்போது பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் கட்சி தொண்டர்கள் 'வந்தே பாரத்' ரெயில் மீது மலர்களை தூவி வரவேற்றனர்.

'செல்பி' எடுத்தனர்

பின்னர் அந்த ரெயிலில் வந்த மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். திண்டுக்கல் வந்த மத்திய இணை மந்திரி எல்.முருகன், ரெயில் நிலையத்தில் 2-வது நடைமேடையில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு சென்றார். அப்போது அவருக்கு ரெயில்வே உயர் அதிகாரிகள், பா.ஜ.க.வினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் ரெயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். அதையடுத்து 'வந்தே பாரத்' ரெயிலில் ஏறி சென்னை நோக்கி புறப்பட்டு சென்றார். முன்னதாக ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அதிவேகமாக வந்த 'வந்தே பாரத்' ரெயிலை பார்த்து வியந்தனர். மேலும் அந்த ரெயிலின் முன்பு நின்று தங்களின் செல்போனில் 'செல்பி'யும் எடுத்துக்கொண்டனர்.


Next Story