அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்


அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 15 March 2023 7:30 PM GMT (Updated: 15 March 2023 7:30 PM GMT)

வேடசந்தூர் அருகே அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூருக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள், திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள சத்யநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கிராம மக்கள், லட்சுமணன்பட்டி நால்ரோடு பகுதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை வழிமறித்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், வேலுமணி, வேல்ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனிவருங்காலத்தில் சத்யநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி செல்வதாக டிரைவர், கண்டக்டர் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story