ராட்சத குடிநீர் குழாய் உடைந்தது:20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


ராட்சத குடிநீர் குழாய் உடைந்தது:20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x

பள்ளிபாளையத்தில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் 10 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டது. இதனால் 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

நாமக்கல்

பள்ளிபாளையம்

குடிநீர் குழாய் உடைந்தது

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் இருந்து திருச்செங்கோட்டிற்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் இருந்து ராட்சத குழாய்கள் நிலத்திற்கு அடியில் பதிக்கப்பட்டு, திருச்செங்கோடு வரை கொண்டு செல்லப்படுகிறது. அதன் மூலம் ஆங்காங்கே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மின் மோட்டார் மூலம் ஏற்றப்படுகிறது.

இதையடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 6 மணி அளவில் பள்ளிபாளையம் ராஜவீதி பகுதியில் உள்ள சாலையில் திடீரென ராட்சத குழாய் உடைந்தது. அப்போது 10 அடி ஆழத்துக்கு சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. குடிநீர் குழாய் உடைந்ததில் அந்த பகுதியில் தண்ணீர் ஆறாக ஓடியது.

தங்கமணி பார்வையிட்டார்

ஒரு மணி நேரம் தண்ணீர் வெளியேறி 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நகராட்சி ஊழியர்கள் மின் மோட்டாரை நிறுத்தி, குழாயில் தண்ணீர் வினியோகம் தடை செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்தை தடை செய்து பள்ளம் ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைத்தனர். பின்னர் மோட்டார் மூலம் குடியிருப்புகளில் சூழ்ந்த தண்ணீரை அப்புறப்படுத்தினர்.

மேலும் முன்னாள் அமைச்சர் தங்கமணி நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்போது அந்த சேதமடைந்த குழாயை சீரமைத்து பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலை துறையினருக்கும், குடிநீர் வாரியத்திற்கும் அறிவுரை வழங்கினார். இதேபோல் நகராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோரும் அந்த இடத்தை பார்வையிட்டனர். சாலையில் அதிக வாகனங்கள் செல்வதால் அதன் அழுத்தம் ஏற்பட்டு குடிநீர் குழாய் உடைந்்ததாக கூறப்படுகிறது.


Next Story