ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வந்த வைகை தண்ணீர்


ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வந்த வைகை தண்ணீர்
x

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வந்த வைகை தண்ணீர்

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கண்மாய்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயும் ஒன்றாகும். இந்த கண்மாய் மூலம் சுமார் 2115.65 எக்டர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் 20 மடைகள் அமைந்துள்ளதுடன் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த பெரிய கண்மாயில் உள்ள தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றன. இந்த கண்மாயை ஆழப்படுத்தி தூர்வாரும் பணியானது கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.18 கோடியே 81 லட்சம் நிதியில் பொதுப்பணித்துறை மூலம் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் வைகை அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கிருந்து தண்ணீர் கடந்த 8-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பார்த்திபனூர், பரமக்குடி, தெளிச்சாத்தநல்லூர், கிளியூர், அரியாங்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்கள் வழியாக ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பகுதிக்கு வைகை தண்ணீர் வந்தடைந்தது. வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் குறைவாகவே வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாயை தூர்வாரும் பணி 85 சதவீதம் முடிவடைந்து விட்டது. இன்னும் 15 சதவீத பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வைகை தண்ணீர் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு வந்துள்ளது. வைகை தண்ணீர் கண்மாய்க்கு வந்துள்ள போதிலும் தூர்வாரும் பணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. கண்மாயில் உள்ள 12 மடைகளில் 8 மடைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. கரையும் பலப்படுத்தப்பட்டு உள்ளதால் கரை உடைத்து எந்த ஒரு கிராமமும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான் என்றார்.


Next Story