நெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை- உறவினர்கள் சாலை மறியல்-பரபரப்பு


நெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்  தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை-  உறவினர்கள் சாலை மறியல்-பரபரப்பு
x

நெல்லையில் தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை ைகது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

திருநெல்வேலி

நெல்லையில் தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை ைகது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கட்டிட தொழிலாளி

நெல்லை தச்சநல்லூர் பால்கட்டளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் பேச்சிராஜா (வயது 26). ஐ.டி.ஐ. படித்த இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தங்கமாரி என்ற வெள்ளையம்மாள் என்ற மனைவியும், 3 மாதமே ஆன கைக்குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் பேச்சிராஜா நேற்று காலை 9.30 மணி அளவில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபரும் சென்றதாக கூறப்படுகிறது.

வழிமறித்த கும்பல்

நெல்லை- மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல், பேச்சிராஜாவின் ேமாட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபரை எச்சரித்து விரட்டிய கும்பல் பேச்சிராஜாவை அரிவாளால் வெட்ட பாய்ந்தனர்.

வெட்டிக் கொலை

உடனே சுதாரித்துக் கொண்ட பேச்சிராஜா அங்கிருந்து தப்பி ஓடினார். எனினும் அந்த கும்பல் அவரை ஓடி, ஓட விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பேச்சிராஜா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. இதுபற்றி அறிந்த பேச்சிராஜாவின் மனைவி தங்கமாரி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்களும், அப்பகுதி பொதுமக்களும் நெல்லை-மதுரை பைபாஸ் சாலைக்கு திரண்டு சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த பேச்சிராஜா உடலை பார்த்து கதறி அழுதனர்.

சாலை மறியல்

பின்னர் குடும்பத்தினர், உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மணிமூர்த்தீஸ்வரம் வழியாக மாற்றுப்பாதை வழியாக வண்ணார்பேட்டைக்கு இயக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா, உதவி கமிஷனர்கள் ஸ்ரீகுமார், சதீஷ்குமார், அண்ணாதுரை, விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் வனசுந்தர், ஹரிகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பேச்சிராஜாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஊரில் போராட்டம்

இதைத்தொடர்ந்து பேச்சிராஜாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு, ஊருக்குள் சென்று தங்களது போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர்.

அதன்பிறகு தான் பேச்சிராஜாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பழிக்குப்பழியா?

இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பேச்சிராஜா மீது கடந்த 2020-ம் ஆண்டு மாசானமூர்த்தி என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இந்த முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 தனிப்படைகள்

மேலும் குற்றவாளிகளை கைது செய்ய நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரன்பேரில், துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story