அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்கக்கூறிய கண்டக்டரை தாக்கிய வாலிபர்கள்
அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்கக்கூறிய கண்டக்டரை வாலிபர்கள் தாக்கினர்.
பொன்மலைப்பட்டி:
கண்டக்டர் மீது தாக்குதல்
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வாழவந்தான்கோட்டை காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் காந்தி ராஜன்(வயது 48). அரசு பஸ் கண்டக்டரான இவர் நேற்று முன்தினம் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து துவாக்குடிக்கு சென்ற பஸ்சில் பணியில் இருந்தார். அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ் நின்றபோது, முன்பக்க படிக்கட்டு வழியாக 2 வாலிபர்கள் பஸ்சில் ஏற முயன்றனர். இதைப்பார்த்த கண்டக்டர் காந்திராஜன், பஸ்சின் முன் பகுதியில் பெண்கள் அதிகமாக நின்றதால், பின்பக்க படிக்கட்டு வழியாக ஏறும்படி வாலிபர்களிடம் அறிவுறுத்தினார்.
ஆனால் முன்பக்க படிக்கட்டு வழியாகவே ஏறிய அந்த வாலிபர்களை பின்பக்கம் செல்லுமாறு மீண்டும் கூறியுள்ளார். பின்னர் அந்த வாலிபர்களிடம் டிக்கெட் எடுக்க கூறியுள்ளார். அப்போது டிக்கெட் எடுக்க மறுத்த அந்த வாலிபர்கள், காந்திராஜனை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து காந்திராஜன் அளித்த புகாரின்பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விபத்தில் 3 பேர் படுகாயம்
*திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே உள்ள ஒரு கடை முன்பு 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை அறிந்து அங்கு வந்த கோட்டை போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*தா.பேட்டை நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(63). சம்பவத்தன்று இவர் நாமக்கல் - துறையூர் சாலையில் நடந்து சென்றபோது தேவானூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (36) ஓட்டி வந்த மொபட் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தா.பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தா.பேட்டையை அடுத்த மாணிக்கபுரம் சாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த வீரன் (57) மொபட்டில் சென்றபோது, பின்னால் தா.பேட்டையை சேர்ந்த ஜீவானந்தம் (21) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வீரனை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமையல் தொழிலாளி திடீர் சாவு
*புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வீரணம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி (65). சமையல் தொழிலாளி. இவர் கடந்த 1-ந் தேதி வேலை விஷயமாக திண்டுக்கல் சென்று விட்டு மீண்டும் பஸ்சில் திருச்சி பஸ் நிலையம் வந்து இறங்கினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அந்த பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.