சித்தோடு அருகே சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்: திருடிய லாரியை விற்பதற்காக ஓட்டிச்சென்ற பிரபல வாகன திருடன்- போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்


சித்தோடு அருகே திருடிய லாரியை விற்பதற்காக கொண்டு சென்றபோது வாகன திருடனை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

ஈரோடு

பவானி

சித்தோடு அருகே திருடிய லாரியை விற்பதற்காக கொண்டு சென்றபோது வாகன திருடனை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

லாரி திருட்டு

சித்தோடு அருகே உள்ள நசியனூர் வேட்டுவபாளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 58). இவர் பப்பாளி பழச்சாறு தயாரிக்கும் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்த கம்பெனியின் வளாகத்தில் அவருக்கு சொந்தமான லாரியை நிறுத்தியிருந்தார்.

நேற்று முன்தினம் 10 மணி அளவில் ேவலை முடிந்ததும் கம்பெனியின் வெளிக்கேட்டை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை 7 அணி அளவில் கம்பெனியின் வெளிக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக திருமூர்த்திக்கு தகவல் கிடைத்தது. உடனே பதறி அடித்தபடி அங்கு சென்றார். அப்போது கம்பெனிக்குள் நிறுத்தியிருந்த லாரியை யாரோ திருடி ஓட்டிச்சென்றதும், அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.

ஜி.பி.எஸ். கருவி மூலம்

இதுகுறித்து செல்போன் மூலம் சித்தோடு சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டனுக்கு திருமூர்த்தி தகவல் தெரிவித்தார்.

அவர் இந்த தகவலை மாவட்ட சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு தெரிவித்தார். இதையடுத்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. திருடப்பட்ட லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்தது. அதை வைத்து லாரி முதலில் எங்கே இருக்கிறது என்பதை ஆராய்ந்தார்கள். அப்போது திருப்பூர் மாவட்டம் அவினாசியை நோக்கி லாரி ெசன்றுகொண்டு இருப்பது தெரிந்தது. அதனால் லாரி கோவையை நோக்கி செல்லலாம் என்று போலீசார் கருதினர்.

போக்குவரத்தை நிறுத்தினார்கள்

இதைத்தொடர்ந்து கோவையில் சாலை போக்குவரத்து பணியில் ஈடுபட்டு இருந்த ஹரிபிரசாத், அய்யம்பெருமாள் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் கோவை கொடீசியா அருகே வாகன சோதனை நடத்தினார்கள்.

மேலும் லாரி வேறு பாதையில் சென்றுவிடக்கூடாது என்பதற்காக கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி ஒரு போலீஸ் ஜீப்பும், திருப்பூரில் இருந்து கோவையை நோக்கி ஒரு போலீஸ் ஜீப்பும் போலீசாருடன், திருடப்பட்ட லாரியை நோக்கி சென்றன.

கொடீசியா அருகே லாரி நெருங்கி வரும் தகவல் ஹரிபிரசாத்துக்கும், அய்யம்பெருமாளுக்கும் தெரிவிக்கப்பட்டது. உஷாரான இருவரும் திடீரென போக்குவரத்தை நிறுத்தினார்கள். சம்பந்தப்பட்ட லாரி அருகே சென்றார்கள். போலீசாரை பார்த்து விட்ட, லாாியை ஓட்டிவந்த திருடன் இறங்கி தப்பி ஓட முயன்றான். உடனே போலீசார் அவனை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பிரபல திருடன் கைது

இதுபற்றி தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் கோவை சென்று திருடனை பிடித்து சித்தோடு அழைத்து வந்தார்கள். மீட்கப்பட்ட லாாியும் கொண்டுவரப்பட்டது.

போலீஸ் விசாரணையில் பிடிபட்டவன் நசியனூர் அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (26)

என்பதும், இவன் பிரபல வாகன திருடன் என்பதும், இவன் மீது ஈரோடு மாவட்டத்தில் மட்டும் வாகன திருட்டு சம்பந்தமாக 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

திருமூர்த்தியின் லாரியை திருடி அதை கோவை உக்கடத்தில் விற்பதற்காக கொண்டு சென்றபோது அவன் மாட்டிக்கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அர்ஜுனனை போலீசார் கைது செய்து, ஈரோடு குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தார்கள்.

லாரி திருட்டு பற்றி தகவல் கிடைத்த 3 மணி நேரத்தில் சினிமா பாணியில் திருடனை லாாியுடன் சுற்றி வளைத்து பிடித்த கோவை மற்றும் சித்தோடு போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.


Next Story