''பிளஸ்-1 பொதுத்தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை''-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி


பிளஸ்-1 பொதுத்தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
x

பிளஸ்-1 பொதுத்தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

புதுக்கோட்டை

பிளஸ்-1 பொதுத்தேர்வு

புதுக்கோட்டையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆசிரியர்களின் கோரிக்கைகள் மட்டுமில்லாமல் அவர்கள் தருகிற புதிய திட்டங்கள், வழிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் புதுக்கோட்டையில் நடத்தப்படுகிறது. இனி அடுத்தடுத்த மாவட்டங்களிலும் இந்த கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படும்.

பிளஸ்-1 பொதுத்தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை. தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்புக்கான பாடங்களை நடத்தாமல் விட்டுவிடுகின்றனர். நேரடியாக பிளஸ்-2 வகுப்பு பாடங்களை நடத்துவதால் பிளஸ்-1 வகுப்பில் உள்ள அடிப்படை பாடங்களை மாணவர்கள் படிக்க முடியாமல் பாதிப்பு ஏற்படும். அதனால் தான் பொதுத்தேர்வுக்கு இணையாக பிளஸ்-1 வகுப்பு தேர்வும் நடத்தப்படுகிறது. இதனால் பிளஸ்-1 தேர்வை ரத்து செய்ய இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

கனியாமூர் பள்ளி

மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்வு என அறிவித்திருப்பதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை. மாணவ-மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க கவுன்சிலிங் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூகநலத்துறை, போலீஸ், சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு நடத்தப்படுகிறது. இனி வருங்காலங்களில் கல்வியாண்டு தொடங்கும் போது முதலில் இதுபோன்ற விழிப்புணர்வு நடத்தி அதன்பின் பாடத்திட்டங்கள் நடத்தப்படும்.

கனியாமூர் தனியார் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க முகாம் நடத்தி வினியோகிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story