இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதில் தவறு இல்லை -அன்புமணி ராமதாஸ் பேட்டி
இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதில் தவறு இல்லை என டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் நேற்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்திய பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு பா.ம.க. சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். `ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து மத்திய அரசு ஒரு குழு அமைத்துள்ளது. அக்குழு முழுமையான பரிந்துரைகளை தெரிவித்த பின்னர் அதுதொடர்பான கருத்தை நாங்கள் விவரமாக தெரிவிப்போம். ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன்.
ஆண்டுதோறும் தேர்தல் வந்து கொண்டுதான் இருக்கிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுவது போல், 2026-ம் ஆண்டு இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என யோசனை கூறுகிறோம். அதாவது நாடாளுமன்ற தேர்தலை ஒரு முறையும், அனைத்து மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தலை ஒரு முறையும் நடத்த வேண்டும் என்று பா.ம.க. கருதுகிறது.
தவறு இல்லை
தமிழகத்தில் போதை பொருட்கள் பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடக்கிறது. சாக்லெட், பிஸ்கெட் உள்ளிட்ட பல்வேறு வடிவில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பள்ளி, கல்லூரி நுழைவுவாசலில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விஷயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சமூகநீதியை நிலை நாட்ட வேண்டும் என்றால் மதுவை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுப்படுத்த சிறப்பு காவல் படையை உருவாக்க வேண்டும்.
இந்தியா, பாரதம் என்ற பெயர்கள் இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதில் தவறு இல்லை.
விரைவில் அறிவிப்போம்
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை நாங்கள் தொடங்கி விட்டோம். ஒவ்வொரு தொகுதியாக வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக விரைவில் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம். காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் கர்நாடக முதல்-மந்திரியை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.