மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு


மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Aug 2022 7:45 PM GMT (Updated: 18 Aug 2022 7:45 PM GMT)

மேட்டூர் அணை 16 கண் மதகுகள் பகுதியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்

ேமட்டூர்:-

மேட்டூர் அணை 16 கண் மதகுகள் பகுதியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

16 கண் மதகுகள்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்ததால், உபரி நீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 39 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்றுமுன்தினம் காலை வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கன அடிக்கு கீழ் குறைந்ததால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையையொட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

செத்து மிதந்த மீன்கள்

இதைத்தொடர்ந்து 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்லும் பாதை, வெறும் பாறைகளாக காட்சி அளிக்கிறது. இந்த பாறைகளுக்கு இடையே ஆங்காக தண்ணீர் குட்டை போல தேங்கி நிற்கிறது.

இந்த நிலையில் நேற்று மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் பகுதியில் உள்ள குட்டைகளில் சிறிய அளவிலான மீன் குஞ்சுகள் செத்து மிதந்தன. நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்சிஜன் பற்றாக்குறை

இது குறித்து தகவல் அறிந்ததும் மீன் வளத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் அந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்ட போது, அந்த தண்ணீர் பாறைகளுக்கு இடையே உள்ள குட்டைகளில் தேங்கி நிற்கிறது. அதில் மீன் குஞ்சுகள் செத்து மிதந்துள்ளன. தேங்கி இருந்த தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் மீன்கள் செத்துள்ளன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றனர்.


Next Story