பண்ருட்டி அருகே கோவிலுக்கு கரகம் எடுத்ததில் இரு கிராம மக்கள் இடையே தகராறு போலீஸ் குவிப்பு; பதற்றம்


தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே கோவிலுக்கு கரகம் எடுத்ததில் இரு கிராம மக்கள் இடையே தகராறு ஏற்பட்டதால் பதற்றம் உருவாகி உள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர்

பண்ருட்டி,

அருள் வாக்கு

பண்ருட்டி அருகே ஆண்டிக்குப்பம் நந்தனார் காலனியில் ஏழை முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினர். அப்போது சாமி ஆடிய பெண் ஒருவர், கொக்குப்பாளையம் அய்யனார் கோவில் அருகே சக்தி கரகம் வைத்து பூஜை செய்து, கரகங்களை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தால் கும்பாபிஷேகம் நடக்கும் என அருள்வாக்கு கூறியதாக தெரிகிறது.

வாக்குவாதம்

இதையடுத்து நந்தனார் காலனி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சக்தி கரகம் உள்ளிட்ட 6 கரகங்களுடன் கொக்குப்பாளையம் அய்யனார் கோவில் அருகே உள்ள ஓடை பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் உடுக்கை அடித்து கரகங்களுக்கு பூஜைகள் செய்து விட்டு, அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

அப்போது அங்கு வந்த கொக்குப்பாளையத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கரகங்களுடன் புறப்பட்டவர்களை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதுடன், இதுபற்றி கிராம மக்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையறிந்து விரைந்து வந்த கிராம மக்கள் கரகங்களை இங்கிருந்து எடுத்துச் செல்லக்கூடாது என நந்தனார் காலனி மக்களிடம் கூறினர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் நெட்டி தள்ளிக் கொண்டனர். இருப்பினும் நந்தனார் காலனி பகுதி மக்கள் இருகரகங்களை மட்டும் எடுத்து சென்று விட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கொக்குப்பாளையம் கிராம மக்கள் சக்தி கரகம் வைத்து பூஜை செய்து அய்யனார் கோவிலில் உள்ள அம்மன் சாமிகளை ஆண்டிக்குப்பத்துக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். ஆகவே அவர்கள் இங்கிருந்து எடுத்துச் சென்ற கரகங்களை மீட்டு தங்களிடம் ஒப்படைத்தால் தான் அம்மன் எங்கள் ஊருக்கு திரும்பும் என கூறி மதியம் 2 மணியளவில் தட்டாஞ்சாவடி மும்முனை சந்திப்பில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், பண்ருட்டி துணை போலிஸ் சூப்பிரண்டு சபியுல்லா ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும் போலீசார், நந்தனார் காலனி மக்கள் எடுத்துச் சென்ற 2 கரகங்களையும் மீட்டு கொக்குப்பாளையம் அய்யனார் கோவிலில் ஒப்படைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இருப்பினும் இருகிராம மக்கள் இடையே பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவுவதால் கடலூரில் இருந்து அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story