திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

மேலசிந்தாமணி திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அரியலூர்

தீமிதி திருவிழா

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள மேலசிந்தாமணி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. கடந்த 7-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அன்று தர்மர் பிறப்பு, 2-ம் நாள் கிருபாச்சாரியார் பள்ளிக்கூடம், 3-ம் நாள் துரோணாச்சாரியார் பள்ளிக்கூடம், 4-ம் நாள் அம்மன் பிறப்பு, 5-ம் நாள் வில் வளைப்பு திருக்கல்யாண தபசு, 6-ம் நாள் விராட பருவம், பூவெடுப்பு, கீசக நாடகம், 7-ம் நாள் கிருஷ்ணன் தூது, அரவாண் கடப்பலி, 8-ம் நாள் சக்கரவர்த்தி கோட்டை அழித்தல், கர்ண மோட்சம், தொடர்ந்து 9-ம் நாளான நேற்று காலையில் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி வரை மிகச் சிறப்பாக தத்துரூபமாக பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் காட்சிகளாக அரங்கேற்றப்பட்டது. நேற்று திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

நேர்த்திக்கடன் செலுத்தினர்

பின்னர் தீமிதி திருவிழாவை முன்னிட்டு முதலில் கோவிலில் இருந்து அக்னி கரகம் எடுத்த பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தனர். பூங்கரகம் கோவிலை வந்தடைந்தவுடன் கோவிலில் இருந்து அக்னி கரகம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா நடைபெற்றது. அக்னி கரகம் மீண்டும் கோவிலை வந்தடைந்தபோது கங்கணம் கட்டி தீ மிதிக்க காத்திருந்த பக்தர்கள் அக்னி கரகத்தோடு இணைந்து கொண்டனர். முதலில் அக்னி கரகம் ஏந்திய பக்தர் அக்னி குண்டம் இறங்கி தீ மிதித்தார். பின்னர் பூங்கரகம், கம்பம் ஏந்திய பக்தர்கள் தீமிதித்தனர். தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story