திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்,

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஒரு வாரத்திற்கு முன்பாகவே பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

தைப்பூச திருவிழா

இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக கடந்த சில நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.

அவர்கள் பாதயாத்திரையாவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்தனர். மேலும் பல்வேறு வாகனங்களிலும் பக்தர்கள் திரண்டனர்.

தீர்த்தவாரி

திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

காலை 6.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

சுவாமி வீதிஉலா

காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

அங்கு சுவாமிக்கு அபிஷேக அலங்காரமாகி, சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

இதில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் 'கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா...' என்ற பக்தி கோஷம் விண்ணதிர கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அங்கப்பிரதட்சனம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

சிறப்பு பஸ்கள்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராம்தாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் நகரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சீரமைத்தனர்.


Next Story