திருமூலநாதர் கோவில் கும்பாபிஷேகம்


திருவரங்குளம் அருகே திருமூலநாதர் கோவில் கும்பாபிஷேகம் 750 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.

புதுக்கோட்டை

திருவரங்குளம் அருகே வெள்ளாற்றங்கரையின் வடக்கே பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி சமேத திருமூலநாதர் கோவில் உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் பல்வேறு முயற்சிகளுக்கு இடையே ேகாவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அன்று காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் முதல் கால பூஜை, 2-ம் கால பூஜை, 3-ம் கால பூஜை, 4-ம் கால பூஜை, 5-ம் கால பூஜை, 6-ம் கால பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து, திருவரங்குளம் வைத்தீஸ்வரர் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க வெள்ளாற்றங்கரையிலிருந்து 5 கருட பகவான்கள் ராஜகோபுரத்தை வட்டமிட புனித குடத்தில் இருந்த நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது. தொடர்ந்து 5 கோபுரங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 750 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பெண்கள் குலவையிட்டும், பக்தர்கள் சிவசிவ ஹர ஹர கோஷம் எழுப்பியும் சாமி தரிசனம் செய்தனர். மேலும் சிவ பக்தர்கள் சிவபுராணம் பாடினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முத்துராமன், கோவில் மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி, வாண்டா கோட்டை ஊராட்சி திருவுடையார்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், திருப்பணி கமிட்டி வி.சி.ராமையா, வாண்டா கோட்டை முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் கனகராஜன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வல்லத்திரா கோட்டை போலீசார் செய்திருந்தனர்.


Next Story