பாசிபட்டினம் தர்கா மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா
பாசிபட்டினம் தர்கா மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
தொண்டி,
பாசிபட்டினம் தர்கா மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
கொடியேற்றம்
திருவாடானை தாலுகா பாசிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த தர்காவின் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி ஸ்தானிகன் வயல் மாணவநகரி கிராமத்தில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள பாசிபட்டினம் சந்தனக்கூடு மைதானத்தை வந்தடைந்தது.
சந்தனக்குடம்
அதனைத் தொடர்ந்து தர்கா கமிட்டியினர் நாட்டிய குதிரை, மேளதாளங்கள் முழங்க தர்காவிற்கு அழைத்து வந்தனர். அதன் பின்னர் தர்காவில் மகான் அடக்க ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தனக்குடம் சந்தனக்கூட்டில் வைக்கப்பட்டது. அதன்பின்னர் சந்தனக்கூடு தர்காவை 3 முறை வலம் வந்தது. பின்னர் மகான் அடக்க ஸ்தலத்தில் சந்தன குடம் வைக்கப்பட்டு உலக நன்மைக்காகவும் மத நல்லிணக்கத்திற்காகவும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் பாத்தியா ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து மகான் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு சந்தனம், மல்லிகைப் பூ, சீனி, பேரிச்சம்பழம் போன்றவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடு
திருவாடானை தாசில்தார் செந்தில் வேல்முருகன், போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ், தொண்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகேசன், விழா கமிட்டியை சேர்ந்த அமீர்கான், சேகனாதுரை, முஸ்தபா கமல், அபூபக்கர், காமீது மைதீன், கலியநகரி ஊராட்சி தலைவர் உம்மு சலீமா நூருல் அமீன், வருவாய்த்துறை, காவல்துறையினர், மகான் வாரிசுதாரர்கள், தர்கா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.
வருகிற 18 -ந் தேதி தலைக்கிழமை நிகழ்ச்சியும், 28-ந் தேதி கொடி இறக்கமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஒலியுல்லா பேரர்கள் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.