போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிச்சயம் நிறைவேற்றும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிச்சயம் நிறைவேற்றும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிச்சயம் நிறைவேற்றும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

பணப்பலன் வழங்குதல்

சென்னை, அடையாரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று, போக்குவரத்துத்துறை சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற, இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 414 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு, ஓய்வூதிய ஒப்படைப்பு உள்ளிட்ட பணப் பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

சீர்குலைந்தது

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை ஒட்டுமொத்தமாக சீரழிந்து போய் இருந்தது. இதை சீரமைக்கும் வகையில் முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். போக்குவரத்துத்துறையில் முதல்-அமைச்சர் வகுத்துக்கொடுக்கும் திட்டங்களை அமைச்சர் சிவசங்கர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். போக்குவரத்துத்துறையில் பல திட்டங்களை தொடங்கி வைக்கும் வாய்ப்பை அமைச்சர் சிவசங்கர் எனக்கு வழங்கியுள்ளார்.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பணியாளர்களின் சம்பள விகிதம் சீர்குலைக்கப்பட்டது. இது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி பே-மெட்ரிக்ஸ் முறையில் தற்போது மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, போக்குவரத்து துறையில் பணிபுரிந்த 6 ஆயிரத்து 281 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்டவற்றை வழங்கிட உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக 3 ஆயிரத்து 414 பேருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட உள்ளது.

நிதிச்சுமை

இதன் அடையாளமாக 612 பேருக்கு இன்று ரூ.171 கோடியே 23 லட்சம் மதிப்பிலான பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சுகாதாரம், கல்வி போன்ற துறைகள் எப்படி மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறதோ அதுபோல போக்குவரத்துத்துறை மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறது. போக்குவரத்துத்துறை ஊழியர்களின் சிக்கல்களை சரிசெய்யும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக செவி சாய்த்து தீர்வு கண்டு வருகிறது. பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்ற நமது திட்டத்தை கர்நாடகாவில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசும் அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் உங்களின் கோரிக்கையை அரசு நிச்சயம் நிறைவேற்றித்தரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி., த.வேலு எம்.எல்.ஏ., போக்குவரத்துத்துறை கூடுதல் செயலாளர் பணீந்திரரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story