பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்குவதற்குகரும்பு கொள்முதல் பணி தீவிரம்:உயரத்தை அளந்து கலெக்டர் திடீர் ஆய்வு


பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்குவதற்குகரும்பு கொள்முதல் பணி தீவிரம்:உயரத்தை அளந்து கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Jan 2023 6:45 PM GMT (Updated: 7 Jan 2023 6:47 PM GMT)

பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்குவதற்கு கரும்பு கொள்முதல் செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட கரும்பின் உயரத்தை டேப் வைத்து அளவீடு செய்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

தேனி

பொங்கல் பரிசு

பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. தேனி மாவட்டத்தில் 517 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 26 ஆயிரத்து 872 ரேஷன் கார்டுதாரர்களுக்கு இவை வழங்கப்பட உள்ளது.

இதற்காக கரும்பு கொள்முதல் பணிகள் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது. மக்களுக்கு வினியோகம் செய்யப்படும் கரும்பு 6 அடி உயரம் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்காக அதிகாரிகள் உயரத்தை அளவீடு செய்து கரும்பு கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கலெக்டர் ஆய்வு

இந்நிலையில், சின்னமனூர் நகராட்சி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் வினியோகம் செய்வதற்காக கரும்பு நேற்று சின்னமனூர் பகுதியில் இருந்து கொள்முதல் செய்து கொண்டு வரப்பட்டன. லாரிகளில் வந்த இந்த கரும்புகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது கொள்முதல் செய்த கரும்பின் உயரம், அதன் தடிமன் ஆகியவற்றை பார்வையிட்டார். உயரம் சரியாக இருக்கிறதா? என்று டேப் வைத்து கலெக்டர் அளவீடு செய்து சரிபார்த்தார். பின்னர், ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்து அங்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார். இதையடுத்து கரும்பு அறுவடை செய்யப்படும் வயல்களுக்கு கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு கரும்பு அறுவடை செய்து கொள்முதல் செய்யப்படும் பணிகளை அவர் பார்வையிட்டார். ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story