ஆண்டிப்பட்டியை சேர்ந்த தம்பதிக்கு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி


ஆண்டிப்பட்டியை சேர்ந்த தம்பதிக்கு  ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி
x

ஆண்டிப்பட்டியை சேர்ந்த தம்பதிக்கு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்த கல்வித்துறை அலுவலர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

கல்வித்துறை அலுவலர்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி காமராஜ்நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 60). இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனது மகன் ராஜா, மருமகள் சோனியாகாந்தி ஆகிய இருவரும் ஆசிரியர் பயிற்சி படித்து முடித்துள்ளனர். எனது நண்பர் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் புதிய காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமாயி அம்மாள் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் கல்வித்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றதாக கூறினார்.

மேலும், அவர் வத்தலக்குண்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில், நேர்முக உதவியாளராக பணியாற்றும் திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் மூலம் பலருக்கு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறினார். பின்னர், என்னை ராமாயி அம்மாள் வத்தலக்குண்டு கல்வி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று மாரியம்மாளை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, ஒரு நபருக்கு ரூ.17 லட்சம் கொடுத்தால் உடனே ஆசிரியர் பணி வாங்கி தருவதாக அவர்கள் 2 பேரும் ஆசை வார்த்தைகள் கூறினர்.

வழக்குப்பதிவு

இதனை நம்பிய நான் எனது மகன், மருமகள் இருவருக்கும் ஆசிரியர் பணி வாங்கித் தருவதற்காக அவர்களிடம் 4 தவணைகளாக மொத்தம் ரூ.24 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் ஆசிரியர் பணி வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தனர். இது குறித்து அவர்களிடம் கேட்டதற்கு ரூ.1 லட்சத்தை மட்டும் திருப்பித் தந்தனர். மீதம் ரூ.23 லட்சத்தை தராமல் மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், மாரியம்மாள், ராமாயி அம்மாள் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story