புகையிலை சாகுபடிக்கு தடை விதிக்க வேண்டும்; மாற்றுப்பயிர்களை பயிரிட ஊக்குவிக்க வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்


புகையிலை சாகுபடிக்கு தடை விதிக்க வேண்டும்; மாற்றுப்பயிர்களை பயிரிட ஊக்குவிக்க வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்
x

இந்தியாவில் புகையிலை சாகுபடியை அடுத்த சில ஆண்டுகளில் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

இந்தியாவில் புகையிலை சாகுபடியை அடுத்த சில ஆண்டுகளில் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புகையிலை உழவர்களை மாற்றுப்பயிர் சாகுபடிக்கு மாற்றுவதற்கான சிறப்புத் திட்டம் ஒன்றை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு தயாரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகின் உயிர்க்கொல்லி தாவரங்களில் முதன்மையானதாக புகையிலை உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் பேர் புகையிலைப் பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். அவர்களில் 13.5 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். உலக அளவில் புகையிலையை அதிகம் பயன்படுத்தும், அதிகம் விளைவிக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அளவில் புகையிலைக்கு அதிக உயிர்களை பலி கொடுக்கும் நாடுகளில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது. மனிதகுலத்தின் எதிரிகளில் ஒன்றான புகையிலை ஒழிக்க உலக புகையிலை எதிர்ப்பு நாளான இன்று (மே 31) நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.

நமக்குத் தேவை உணவு... புகையிலை அல்ல ( "We need food, not tobacco") என்பது தான் 2023-ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை எதிர்ப்பு நாள் கருப்பொருளாகும். புகையிலை சாகுபடி செய்யும் உழவர்களுக்கு சத்தான, அதிக வருவாய் கொடுக்கும் மாற்றுப்பயிர் சாகுபடி முறைகள், அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவது, அவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றின் மூலம் புகையிலை சாகுபடியாளர்களை மாற்றுப்பயிர் சாகுபடிக்கு மாற்ற வேண்டும் என்பது தான் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தும் செய்தியாகும்.

இந்தியாவின் ஒட்டுமொத்த சாகுபடி பரப்பில் 0.27% அளவில், அதாவது 4.5 லட்சம் ஹெக்டேரில் மட்டும் தான் புகையிலை சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், அதுவே இந்தியாவிலும், உலகிலும் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் உயிரிழப்பதற்கு காரணமாக உள்ளது. புகையிலையால் யாருக்கும், எந்த நன்மையும் இல்லை. புகையிலை, அதை சாகுபடி செய்யும் உழவர்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்கிறது என்பதே அப்பட்டமான பொய் ஆகும். புகையிலை சாகுபடியில் பூச்சுக்கொல்லி தெளித்தல் உள்ளிட்ட நடைமுறைகளால் ஏராளமான உழவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான குழந்தைத் தொழிலாளர்கள் புகையிலை சாகுபடியில் ஈடுபடுத்தப்படுவதால், அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, புகையிலை அரக்கன் ஒழிக்கப்பட வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டதைப் போல, இந்தியாவிலும் புகையிலை சாகுபடியை அடுத்த சில ஆண்டுகளில் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புகையிலை உழவர்களை மாற்றுப்பயிர் சாகுபடிக்கு மாற்றுவதற்கான சிறப்புத் திட்டம் ஒன்றை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு தயாரிக்க வேண்டும். மாற்றுப்பயிர்களுக்கு மாறும் உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story