ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்பனை; கை கொடுக்கும் பண்ணை பசுமை காய்கறி கடைகள்


ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்பனை; கை கொடுக்கும் பண்ணை பசுமை காய்கறி கடைகள்
x

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு நேற்று விற்பனை ஆனது. பண்ணை பசுமை காய்கறி கடையில் இதைவிட குறைந்த விலையில் தக்காளி கிடைப்பதால், ஓரளவுக்கு மக்களுக்கு அது கை கொடுக்கிறது.

ஒரு கிலோ தக்காளி ரூ.110

சமீப நாட்களாக பெய்த கோடை மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் வரத்து தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து, நேற்று முன்தினம் ரூ.80 முதல் ரூ.85 வரை மொத்த மார்க்கெட்டுகளில் விற்பனை ஆனது. வெளி மார்க்கெட்டுகளில் இதன் விலை மேலும் அதிகரித்து, ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்கப்பட்டது.

ஏற்கனவே அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, தக்காளி விலை மேலும் ஒரு இடியாக அமைந்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தக்காளி விலை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகரித்து இருந்தது. அதாவது மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்பனையானது. இதைவிட வெளிமார்க்கெட்டுகளில் கூடுதலாகவே விற்பனை செய்யப்பட்டது.

கை கொடுக்கும் பண்ணை பசுமை கடைகள்

தொடர்ந்து விளைச்சல் பாதிப்பு காரணமாகவே தக்காளி விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 30 முதல் 40 சதவீதம் அளவிலேயே தக்காளி வரத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. விளைச்சல் அதிகரித்து, வரத்து மேலும் கூடும் வரை இதேபோல் தக்காளி விலை உச்சத்திலேயே காணப்படும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

இந்த விலை உயர்வால்மக்கள் படும் கஷ்டத்தை அறிந்து, கூட்டுறவுத்துறை நடத்தி வரும் பண்ணை பசுமை கடைகளில் வெளிமார்க்கெட்டுகளை விட குறைந்த விலையில் தக்காளியை விற்க அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 65 பண்ணை பசுமை காய்கறி கடைகளில் முதல்கட்டமாக ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.85 வரையிலான விலையில் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் சென்னையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.79-க்கு விற்பனை ஆனது. இது ஓரளவுக்கு கைகொடுப்பதாக தெரிவிக்கும் மக்கள், கூடுதலாக தக்காளியை கொள்முதல் செய்து பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story