கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வார விடுமுறை மற்றும் சுதந்திர தின விடுமுறையையொட்டி 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் நேற்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள சுங்கவரி வசூல் மையத்தில், 3 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மோயர் பாயிண்ட், குணா குகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட இடங்களை கண்டுகளித்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்து ஆனந்தம் அடைந்தனர். வெள்ளியை வார்த்து ஊற்றியதை போல, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளிநீர் வீழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.
இதேபோல் மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலியாக, கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன. பல்வேறு தனியார் காட்டேஜ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனவே ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிகளில் கட்டணங்களை நிர்ணயம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.