கரைபுரண்டு ஓடும் காவிரி ஆற்றை காண மேட்டூரில் குவியும் சுற்றுலா பயணிகள்


கரைபுரண்டு ஓடும் காவிரி ஆற்றை காண மேட்டூரில் குவியும் சுற்றுலா பயணிகள்
x

மேட்டூர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில், கரைபுரண்டு ஓடும் காவிரி ஆற்றை காண மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

சேலம்

மேட்டூர்:

மேட்டூர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில், கரைபுரண்டு ஓடும் காவிரி ஆற்றை காண மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

மேட்டூர் அணை நீர்மட்டம்

கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் உபரிநீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணை வந்தடைந்ததன் எதிரொலியாக கடந்த 16-ந் தேதி காலை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.

அணை நிரம்பிய நிலையிலும் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

சுமார் 8 மாத இடைவெளிக்கு பிறகு மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் உபரி நீர் திறந்து விடப்பட்ட செய்தியை அறிந்த சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மேட்டூர் வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள புதுப்பாலத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் அழகை ரசிக்கின்றனர்.

சிறிய கடைகள்

அதேபோன்று காவிரி பாலம், மேட்டூர் அனல் மின் நிலைய பாலம் ஆகிய பகுதிகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடும் காட்சியை கண்டு ரசிக்கின்றனர். மேலும் அணையின் வலது கரைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பவள விழா கோபுரத்தில் இருந்து அணையின் முழுமையான தோற்றத்தையும், அழகையும் கண்டு சுற்றுலாபயணிகள் வியந்து செல்கின்றனர்.

மேட்டூரில் கரைபுரண்டு ஓடும் காவிரியை காண, கடந்த 16-ந் தேதி முதல் நாள் தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக புதுப்பாலத்தின் இரு பகுதிகளிலும் தின்பண்ட கடைகள், விளையாட்டு பொருட்கள் கடைகள், ஐஸ்கிரீம் கடைகள் என சிறிய, சிறிய கடைகள் அதிகளவில் தொடங்கப்பட்டு விற்பனை ேஜாராக நடந்து வருகிறது.


Next Story