போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைதவிர்க்க நடவடிக்கை


போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைதவிர்க்க நடவடிக்கை
x
தினத்தந்தி 18 April 2023 7:00 PM GMT (Updated: 18 April 2023 7:01 PM GMT)

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆர்.டி.ஓ. ராஜா தெரிவித்தார்.

திண்டுக்கல்

ஆய்வுக்கூட்டம்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. அடுத்த மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்பேரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் குறித்த ஆலோசனை கூட்டம், கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், நகராட்சி தலைவர் செல்லத்துரை, போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், தாசில்தார் முத்துராமன், உதவி வன பாதுகாவலர் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா, நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு அலுவலர் லாரன்ஸ், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பரதன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து அதிகாரிகள் கலந்துரையாடினர். அப்போது ஆர்.டி.ஓ. ராஜா கூறியதாவது:-

போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் சிரமப்படும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. அதன்படி, வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லும் பாதையில் காலை 7 மணி முதல் சுற்றுலா வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படும். ஏரிச்சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை வருகிற ஜூன் மாதம் வரை நிறுத்தி வைக்கப்படும். நகரில் இருந்து இயக்கப்பட்டு வரும் ஆம்னி பஸ்களை நிறுத்துவதற்கு தனியாக இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. நகரின் நுழைவு வாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் 2 வழிகளையும் திறந்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர சாலையோர கடைகளை அப்புறப்படுத்துவது, ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளும் மேற்ெகாள்ளப்பட உள்ளது.

ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கூட்டுக்குழு அமைக்கப்படும். நகரின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் நகராட்சி சார்பில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி முதல் கனரக வாகனங்கள் சுற்றுலா இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story