புதிய அணுகுசாலையில் போக்குவரத்து தொடங்கியது


புதிய அணுகுசாலையில் போக்குவரத்து தொடங்கியது
x
தினத்தந்தி 23 Jun 2023 2:13 AM IST (Updated: 23 Jun 2023 4:28 PM IST)
t-max-icont-min-icon

புதிய அணுகுசாலையில் போக்குவரத்து தொடங்கியது.

திருச்சி

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்

திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் டி.வி.எஸ். டோல்கேட் முதல் மாத்தூர் பகுதியில் உள்ள அரை வட்ட சுற்றுச்சாலை வரை விரிவாக்கம் செய்ய ரூ.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் தொடங்கின. இதில் 4 பெரிய தரைப்பாலங்கள், 8 சிறிய தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2½ ஆண்டுகளாக நடந்து வந்த சாலை விரிவாக்கம் செய்யும் பணி 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. ஆனால் விமானநிலையம் முதல் டி.வி.எஸ் டோல்கேட் வரை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாததால் சில இடங்களில் மழைநீர் வடிகால் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. குறிப்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முதல் கொட்டப்பட்டு குளம் வரை மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை.

புதிய அணுகு சாலை

மேலும், இந்த சாலையில் விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை அகற்றுவதில் சிக்கல் உள்ளதால், அப்பகுதியில் கிழக்குப்புறம் 276 மீட்டர் தொலைவுக்கு சாலையை அகலப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு இந்த பகுதியில் மட்டும் சாலையை அகலப்படுத்தாமல் இருந்தால், அதிகளவில் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுப்பிரமணியபுரம் முதல் ஜெயில்கார்னர் வரை புதிதாக அணுகு சாலை அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் போக்குவரத்து இன்றி இருந்தது.

போக்குவரத்து தொடங்கியது

நேற்று முன்தினம் வரை இந்த அணுகு சாலையை வாகனம் நிறுத்தும் இடமாகவும், தரைக்கடைகள் அமைத்தும் அப்பகுதியில் இருந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். மேலும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியிலும் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்றுவந்தனர். இந்தநிலையில் நேற்று ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு அணுகு சாலையில் போக்குவரத்து தொடங்கியது. அரியமங்கலம் போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் நின்று வாகனங்களை ஒழுங்குபடுத்தினர்.

கோரிக்கை

இதனால் சுப்பிரமணியபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி பயணம் செய்தனர். இதேபோல் தொடர்ந்து போலீசார் கண்காணித்து அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story